10/01/2020
அண்ணா பல்கலைக்கழகம் இரண்டாகப் பிரிக்கப்பட்டால் இடஒதுக்கீட்டு முறையும் இருக்காது
`பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் படிப்பதற்கு ஏற்ற கட்டண முறையும் இருக்காது. இட ஒதுக்கீட்டு முறையும் இருக்காது. இதுதான் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு `இன்ஸ்டிடியூட் ஆஃப் எமினன்ஸ்’ அந்தஸ்து வழங்குவதில் உள்ள அரசியல்.’
அண்ணா பல்கலை கழகம்
இந்தியாவின் முதல் பொறியியல் பல்கலைக்கழகம் என்ற பெருமை, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உண்டு. தேசத்தின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றாகப் போற்றப்படும் இந்தப் பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிக்கப்போவதாகத் தமிழக அரசு அண்மையில் கூறியிருந்தது. தொன்மை வாய்ந்த அண்ணா பல்கலைக்கழகத்தை 'மாண்புமிகு அண்ணா கல்வி நிறுவனம் (Anna Institute of Eminence) என்றும், அண்ணா பல்கலைக்கழகம் (Anna University) என்றும் இரண்டாகப் பிரிக்க உள்ளதாகவும், இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், சி.வி.சண்முகம் உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்திருந்தது. அண்ணா பல்கலைக்கழகச் சட்டம் 1978-ஐ திருத்தி இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளதாகவும் கூறியுள்ள தமிழக அரசின் அறிவிப்புக்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளன.
இந்த விவகாரம் குறித்துப் பேசிய கல்வியாளர் ஜவஹர், "உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்களை இந்தியாவில் உருவாக்க வேண்டும் என்பதற்காகத் தகுதி வாய்ந்த பல்கலைக்கழகங்களைத் தேர்வுசெய்து 'இன்ஸ்டிடியூட் ஆஃப் எமினன்ஸ்'அந்தஸ்து வழங்க உள்ளது மத்திய அரசு. அந்த அடிப்படையில்தான் 'இன்ஸ்டிடியூட் ஆஃப் எமினன்ஸ்' (Anna Institute of Eminence) என்ற அந்தஸ்துக்கு அண்ணா பல்கலைக்கழகம் தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த அந்தஸ்தை அண்ணா பல்கலைக்கழகத்துக்கு வழங்குவதற்கு, நாம் எந்தத் தடையும் கூறப்போவதில்லை. ஆனால், மத்திய அரசு இதை எப்படி வழங்கப்போகிறது என்பதில்தான் சிக்கல்கள் உள்ளன.
இட ஒதுக்கீடு முறையே இருக்காது
அண்ணா பல்கலைக்கழகத்துக்கு 'இன்ஸ்டிடியூட் ஆஃப் எமினன்ஸ்' அந்தஸ்து வழங்கப்பட்டால், அது தன்னாட்சி பெற்ற அமைப்பாகச் செயல்பட முடியும். ஆனால், மத்திய அரசு அந்தப் பல்கலைக்கழகத்துக்கு நிதி கொடுப்பதால் மத்திய அரசுக்கு கட்டுப்பட்டே செயல்பட்டாக வேண்டும். கல்லூரியின் கட்டணத்தை கல்லூரியே நிர்ணயம் செய்துகொள்ளலாம் அதற்கு எந்த தடையும் கிடையாது.
கலந்தாய்வு
குறிப்பாக, மத்தியில் பி.ஜே.பி-தான் ஆட்சி செய்கிறது. அந்தக் கட்சி, ஐ.ஐ.டி போன்ற கல்வி நிறுவனங்களில் தன்னுடைய கட்சியின் சித்தாந்தத்தை எந்த அளவில் திணிக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். அப்படியான வழிமுறைகள் சிறப்பு அந்தஸ்து பெற்ற புதிய பல்கலைக்கழகத்தில் நடைமுறை ஆகும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
கொள்கை கோட்பாடுகள், ஆராய்ச்சிகள், பாடப்பிரிவுகள் என ஒட்டுமொத்தமாக ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் என்ன சொல்கிறார்களோ அதுவே அந்தப் பல்கலைக்கழகத்தில் நடைமுறையாகின்ற ஒரு சூழல் உருவாகும். இதனால் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் படிப்பதற்கு ஏற்ற கட்டண முறையும் இருக்காது. இட ஒதுக்கீட்டு முறையும் இருக்காது. இதுதான் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு' இன்ஸ்டிடியூட் ஆஃப் எமினன்ஸ் 'அந்தஸ்து வழங்குவதில் உள்ள அரசியல். குறிப்பாக, ஒட்டு மொத்தப் பல்கலைக்கழகத்தின் இயக்கத்தையும் மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கான ஒரு முயற்சிதான் இது.
எமினன்ஸ்' அந்தஸ்து பெற்ற பல்கலைக்கழகத்தின் நிலை இது என்றால், அண்ணா பல்கலைக்கழகத்தைப் பிரித்து வெறும் அண்ணாப் பல்கலைக்கழகம் என்று புதிதாக உருவாகும் பல்கலைக்கழகத்தின் நிலை மிக மோசமானதாக இருக்கும்.
அண்ணா பல்கலைக்கழகம்
குறிப்பாக, ஸ்த்திரதன்மையுடன்கூடிய கட்டமைப்புகளை உடையது நமது அண்ணா பல்கலைக்கழகம். கிண்டி கேம்பஸ், எம்.ஐ.டி கேம்பஸ் போன்ற சிறப்புமிக்க ஆராய்ச்சிக் கூடங்கள், அனுபவமுள்ள ஆராய்ச்சியாளர்கள், பேராசிரியர்கள் என அறிவார்ந்த நிலையில் இயங்கிக்கொண்டிருக்கிறது. அதை இந்த எமினன்ஸ் அந்தஸ்துக்காக, மத்திய அரசுக்குத் தாரை வார்த்துக் கொடுத்துவிட்டு புதிய பல்கலைக்கழகத்தைத் தொடங்குவது கரும்பைக் கொடுத்துவிட்டு சக்கையை நாம் வைத்திருப்பதற்குச் சமம்.
எனவே, தொடங்கப்படுகிற புதிய பல்கலைக்கழகத்தால் இந்த மாநில மாணவர்களுக்கு என்ன நன்மை விளையும்? அந்தப் புதிய பல்கலைக்கழகத்தில் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் இருப்பார்களா, தரமான ஆராய்ச்சிக் கூடங்கள்தான் இருக்குமா? இப்படி, பலகேள்விகள் உள்ளன. ஒன்று மட்டும் மாறாமல் அதில் இருக்கும். இதுவரை அண்ணா பல்கலைக்கழகத்துக்குக் கீழ் இயங்கி வந்த தனியார் பொறியியல் கல்லூரிகள் மட்டும் இயங்கிக்கொண்டிருக்கும். வேறு எந்தச் சிறப்பம்சமும் அதில் இருக்காது என்பதே உண்மை.
மத்திய அரசு
இன்னும் எளிமையாகச் சொன்னால், பள்ளிக் கல்வியில், சி.பி.எஸ்.இ-க்கும் மெட்டிரிகுலேஷனுக்கும் உள்ள வேறுபாட்டைத்தான் இங்கு நாம் காண முடியும்' ஒருபுறம் இன்ஸ்டியூட் ஆஃப் எமினன்ஸ்"அந்தஸ்து பெற்ற அண்ணா பல்கலைக்கழகத்தில் ஏழை எளிய மக்கள் நுழையவே முடியாத நிலை ஏற்பட்டுவிடும். மற்றொருபுறம் புதிதாகத் தொடங்கப்படுகிற அண்ணா பல்கலைக்கழகத்தில் தேவையான கட்டமைப்புகளே இருக்காது
கா . புவனேஸ்வரி